தேசிய மகளிர் ஆணைய தலைவராக விஜயா கிஷோர் ரஹாத்கர் இன்று (செவ்வாய்க் கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்துக்கு வருகை தந்த விஜயா கிஷோர் ரஹாத்கருக்கு, அலுவலர்கள், பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முன்மாதிரியாகத் திகழ்ந்த மறைந்த பெண் தலைவர்களான ஜான்சி ராணி லட்சுமிபாய் உள்ளிட்ட புகைப்படங்களுக்கு அவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அவர் கோப்பில் கையெழுத்திட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயா கிஷோர் ராஹாத்கர் கூறியதாவது:-
என் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. என்னால் முடிந்ததைச் செய்வேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. குற்றங்களைச் செய்யும் சிதைந்த மனப்பான்மை கொண்டவர்கள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற குற்றங்களைச் செய்ய நினைக்கும் முன் அதன் விளைவுகளைப் பற்றி அவர்கள் பயப்பட வேண்டும். ஆணையம் இதை நோக்கி தொடர்ந்து செயல்படும்.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பணியிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேசிய பெண்கள் ஆணையம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவில்லை. ஆனாலும் ஆணையம் அதன் வேலைகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறது. அந்த வகையில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவரான விஜயா கிஷோர் ரஹாத்கர், பாஜகவின் தேசிய செயலாளராகவும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளராகவும் இருந்தவர். இயற்பியலில் இளநிலை பட்டமும், வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 2007 முதல் 2010 வரை அவுரங்காபாத் மாநகராட்சி மேயராக பதவி வகித்தவர்.