தமிழக அரசு மழை வெள்ளப் புயலால் பாதிக்கும் மாவட்ட மக்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான, துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தற்போதைய வானிலை ஆய்வு மைய அறிவிப்புப்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு மாநிலத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதே போல காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை, புயல், வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புண்டு.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் பெய்த மழை, கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றையும் அதனால் மக்கள், கால்நடைகள், விளைநிலங்கள் அடைந்த பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த கால மழைக் கால அனுபவங்களை, சிரமங்களை, பாதிப்புகளை மனதில் வைத்து தமிழக அரசு சென்னை உட்பட மாநிலத்தில் மழை வெள்ளப் புயலால் பாதிக்கும் மாவட்ட மக்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான, துரிதமான, முறையான, சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.