இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்கள் மற்றும் 199 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து நேற்று (அக்.24)மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், 2 இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த அக்.23-ம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துவது குறித்து நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தேன்.
இருப்பினும், இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே, இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கூட்டு நடவடிக்கைக் குழுவினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வினைக் கொண்டுவரும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.