தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பிழையாக பாடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் புத்தாய்வு திட்ட பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அங்கு இருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அப்போது, ‘திகழ்பரதக் கண்டமிதில்’ என்பதற்கு பதிலாக, ‘கண்டமதில்’ என்றும், ‘புகழ்மணக்க’ என்பதற்கு பதிலாக, ‘திகழ்மணக்க’ என்றும் அவர்கள் பிழையாக பாடினர். இதையடுத்து, பிழையின்றி பாடுமாறு அவர்களை துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார். மீண்டும் பாடியபோதும், அதேபோல பிழையாகவே பாடினர். இதனால், நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ‘‘தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை. அவர்கள் பாடும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால், இரண்டு மூன்று இடங்களில் அவர்களது குரல் கேட்கவில்லை. எனவே, மீண்டும் சரியாக பாட வைத்தோம். நிறைவாக தேசிய கீதமும் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தேவையின்றி மீண்டும் பிரச்சினையை கிளப்பாதீர்கள்’’ என்று கூறினார்.
சென்னை டிடி தொலைக்காட்சியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை பாடாமல் விட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ‘ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். துணை முதல்வர் உதயநிதி மற்றும் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் அதேபோல நிகழ்ந்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.