கர்நாடகத்தில் பருவமழைக்கு 25 பேர் மழை தொடர்பான பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை வழக்கமாகப் பதிவாகும் மழை அளவு 852 மி.மீ அளவை விட, இம்முறை 978 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. பருவமழை காலத்திலும் 15 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் 25ம் தேதி வரை மாநிலத்தில் சராசரியாக 181 மி.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கமாக 114 மி.மீ ஆகும். மாநிலத்தில் 58 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
பருவமழையினால் பெய்த கனமழையால் மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 84 வீடுகள் முழுமையாகவும், 2,077 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. முழுவதுமாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் இழப்பீடும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மொத்தம் 74,993 ஹெக்டேர் விவசாய பயிர் சேதமும், 30,941 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,05,937 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் மதிப்பிடப்பட்டுள்ளது. மழையால் மாநிலத்தில் 1.06 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் நாசமாகியுள்ளன. மாநிலத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்பு கொள்ளளவு 895 ஆகும். 62 ஆயிரம் மில்லியன் கன அடியாகவும், தற்போதைய நீர் இருப்பு 871.26 டிஎம்சியாகவும் உள்ளது. பெங்களூருவில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 275 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இது மூன்றாவது அதிக மழைப்பொழிவாகும். இவ்வாறு அவர் கூறினார்.