பழனிசாமி போராட்டம் அறிவித்திருப்பது வெற்று விளம்பரத்துக்கான மலிவான அரசியல்: அமைச்சர் காந்தி!

வேலூர் சரக கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் 28-ம் தேதி (நாளை) குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அறிவித்திருப்பது வெற்று விளம்பரத்துக்கான மலிவான அரசியல் என கைத்தறித் துறை அமைச்சர் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கைத்தறித் துறை அமைச்சர் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் சரகம், குடியாத்தம் பகுதியில், 34 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் லுங்கி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளின்போது வெளிச்சந்தையில் விற்பனை வரவேற்பு அதிகமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டும், கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை ஏற்றும், கூடுதல் ஊக்கத் தொகையாக ஒரு பாவுக்கு (8 லுங்கிகளுக்கு) மொத்தம் ரூ.360 வழங்கி, மொத்த நெசவுக் கூலி ரூ.2,102 என கைத்தறி நெசவார் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 16-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இவ்வாறு நெசவு கூலி உயர்த்தி வழங்கப்படும் நிலையில், அதிமுக ஆர்ப்பாட்ட அறிவிப்பு தேவையில்லாததும், அர்த்தமற்றதும் ஆகும்.

அடிப்படைக் கூலி உயர்வு: கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் அவ்வப்போது அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படுகிறது. பருத்தி நூல், பட்டு நூல், கம்பளி மற்றும் கலப்பின நூல் ஆகிய நூல் கொள்முதலுக்கு 15 சதவீத விலை மானியத்துடன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நூல்கள் தரமற்றவை என தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

கைத்தறி நெசவுத் தொழிலையும், நெசவாளர்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், எவ்வித கொள்கையும், கோட்பாடும் இல்லாமல், சுய லாபம் மற்றும் வெற்று விளம்பரத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான மலிவான அரசியலில் ஈடுபடுவதை இனிமேலாவது கைவிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் காந்தி கூறியுள்ளார்.