மதுரையில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அந்த மாவட்ட கலெக்டர் சங்கீதா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் அரபிக்கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை 3 மணி முதல் 3.15 மணி வரை கனமழை வெளுத்து வாங்கியது. இந்த 15 நிமிடத்தில் மட்டும் மதுரையில் 4.5 சென்டிமீட்டர் மழை என்பது பதிவாகி இருந்தது. மொத்தமாக பார்த்தால் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை 11 மணிநேரத்தில் மொத்தம் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் கண்மாய்கள் நிரம்பின. இந்த கனமழையின் காரணமாக மதுரையின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. செல்லூர், ஆனையூர், ஆபிசர் டவுன், முல்லை நகர், பீபீ குளம், அத்திகுளம், சர்வேயர் காலனி, ஒத்தக்கடை, காந்தி நகர், பார்க் டவுன், பாரதி நகர், ஜிஆர் நகர், சூர்யா நகர், நாராயணபுரா, விஸ்வசாந்தி நகர் பகுதிகளிலும் மழைநீர் வீடு, மருத்துவமனை, கடைகளை சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வீடுகளுக்குள் நுழைந்த மழைநீர் இன்னும் வடியாத நிலையில் தொடர்ந்து மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பல இடங்களில் கழிவுநீரோடு மழைநீர் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி, எம்எல்ஏக்கள், தமிழக அரசை மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் பொதுமக்களுக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டார். அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்து வரும் கனமழையினால் செல்லூர், ஆனையூர், பிபி குளம், காந்திபுரம், விளாங்குடி மற்றும் கட்டபொம்மன் நகர் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் சுகாதார நலன் கருதி 60 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி மருத்துவ முகாம் நாளை (27.10.2024) அதாவது இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெற உள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்படி கால்நடைகளுக்கும் சிறப்பு முகாம்கள் கட்டபொம்மன் நகர், முல்லை நகர், விளாங்குடி, ஆனையூர், ஆத்திக்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.