அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்தார் ஜோ பைடன்!

நவம்பர் மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளநிலையில், ஜோ பைடன் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் (59) களமிறங்கி உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது உடல்நலம் மற்றும் கட்சியினரின் விருப்பம் காரணமாக, மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியில்லை என்று கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். அவருக்குப் பதிலாக ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.

தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அமெரிக்க குடிமக்கள், அதிகாரிகள் பலர் முன்கூட்டியே வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தனது வாக்கை முன்கூட்டியே பதிவு செய்தார். டெலாவேர் மாநிலத்தில் அவரது வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வாக்களிப்பு மையத்தில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்காளர்கள் தெருவில் வரிசையாக நின்று கொண்டிருந்தபோது, பைடன் அவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்றார். வரிசையில் காத்திருந்தபோது வாக்காளர்களுடன் உரையாடினார், மேலும் ஒரு வயதான பெண்ணை சக்கர நாற்காலியில் அவருக்கு முன்னால் வாக்களிக்க உதவினார். சுமார் 40 நிமிடம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.