சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை கூறியுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டாமினிக், மைக்கேல் பராட் மற்றும் ஜீனெட் எப்ஸ், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இந்த 4 பேரும் தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் போயிங் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விண்கலம் விண்வெளி வீரர்கள் இன்றி கடந்த செப்டம்பர் மாதம் பூமிக்கு வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மில்டன் புயல் காரணமாக மீண்டும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் இந்தியா வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு 8 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர். அவர்களும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்களின் ஆய்வுப் பணி 8 நாட்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது.
மேலும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் 2 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த சூழலில் மார்ச் மாதம் விண்வெளிக்கு சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் 4 அமெரிக்கர்கள் மற்றும் 3 ரஷ்யர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விண்வெளியில் சுமார் ஐந்து மாதங்கள் தங்கியிருக்கும் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்காவிலும், உலகெங்கிலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுபவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பகிரப்பட்ட வீடியோவில் பேசிய சுனிதா வில்லியம்ஸ், “ஐ.எஸ்.எஸ்.சிலிருந்து வாழ்த்துக்கள்.. இன்று வெள்ளை மாளிகையிலும் உலகெங்கிலும் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூமியிலிருந்து 260 மைல்களுக்கு அப்பால் தீபாவளியைக் கொண்டாடும் தனித்துவமான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.. தீபாவளி மற்றும் பிற இந்தியப் பண்டிகைகளைப் பற்றி எங்களுக்குக் கற்பிப்பதன் மூலம் எனது தந்தை தனது கலாச்சார வேர்களை பகிர்ந்து கொண்டார்” என்று அவர் கூறினார்.
மேலும் தீபாவளி பண்டிகையில் பங்கேற்றதற்காகவும், சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரித்ததற்காகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கும் வில்லியம்ஸ் நன்றி தெரிவித்தார்.