திமுகவில் இணைய அழைப்பு வந்தால் மீண்டும் தாய்க் கழகத்திற்கு திரும்பத் தயார்: திருச்சி சூர்யா!

மீண்டும் திமுகவில் இணைய அழைப்பு வந்தால் மீண்டும் தாய்க் கழகத்திற்கு திரும்பத் தயாராக இருப்பதாக திருச்சி சூர்யா கூறியுள்ளார்.

திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அண்ணாமலை பற்றிய பல ரகசியங்களைப் பரபரப்பாக வெளியிட்டு வந்தார். இவரது குற்றச்சாட்டுகள் பற்றி ஒருவிளக்கமும் இதுவரை அண்ணாமலை அளித்ததே இல்லை. அவரைக் கண்டுகொள்ளவும் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து பாஜக உட்கட்சி விவகாரங்களை சூர்யா அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில், தனது அரசியல் எதிர்காலம் முடங்கிப் போய் உள்ள சூழலில் மீண்டும் திமுகவில் இணைய அழைப்பு வந்தால் மீண்டும் தாய்க் கழகத்திற்கு திரும்பத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் திருச்சி சூர்யா கூறியுள்ளதாவது:-

திமுகவில் என் அப்பா இருந்தார். ஆகவே அதில்தான் நான் பயணித்து வந்தேன். நான் திருச்சி சிவாவின் மகன் என்பதால் திமுகவில் பதவி கேட்கவில்லை. 15 ஆண்டுகளாகக் கட்சிக்காக நான் உழைத்திருந்தேன். அதை வைத்து கட்சியில் ஒரு பொறுப்பு கேட்டேன். அதற்காக எம்.எல்.ஏ., எம்பி பதவி கேட்கவில்லை. கட்சியில் ஒரு பதவி கேட்டேன். எங்குப் போனாலும் என் அப்பாவின் அடையாளத்தைத் தூக்கிச் சுமப்பது ஒரு பாரமாக உணர்ந்தேன். எனவே தனி அடையாளத்தை விரும்பினேன். திமுக தலைமைக்கும் இதை உணர்த்தினேன். யாரும் எனக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்க முன்வரவில்லை. கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் கொரோனா காலகட்டத்தில் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியில் ஏமாற்றம்தான் எனத் தெரிந்தது.

எனக்கு எங்கே கோபம் வந்தது தெரியுமா? தேமுதிகவிலிருந்து வந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பதவி கொடுத்தார்கள். முரசொலியில் தனி அலுவலகம் போட்டுக் கொடுத்தார்கள். கமல் கட்சியிலிருந்து வந்த ஒருவருக்கு உடனே அங்கீகாரம் அளித்தது திமுக. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன். அவரது தாத்தா அண்ணாதுரையுடன் நெருக்கமாக இருந்தவர். அவரது வாரிசுக்கு திமுகவில் முறையான அங்கீகாரம் இல்லை. அந்த இடத்தில் நாதகவில் இருந்து வந்த ராஜீவ்காந்தியைக் கொண்டு வந்து திமுக மாணவரணியில் பொறுப்பு கொடுக்கிறார்கள். நான் பிஜேபிக்கு சென்றது கேள்வி கேட்கிறார்கள். ஆனால், நேற்று திமுகவுக்கு வந்த ஒருவருக்குப் பதவி வழங்குகிறார்கள். திமுகவில் அப்பாவுக்கு எதிராகச் சிலர் உள்ளனர். அவர்களுக்கு எனக்கு எந்தப் பகையும் இல்லை. ஆனாலும், அந்தப் பகை என்னையும் பாதிக்கிறது. எனக்கும் நேருவுக்கும் நேரடி பகை இல்லை. இருந்தாலும் சிவா மகன் என்பதால் என்னைக் கட்டம் கட்டுவார்.

கனிமொழி 2ஜி வழக்கில் சிக்கிய போது கூடவே இருந்தேன். அவரே ‘கஷ்டமான காலத்தில் என்னுடன் இருந்தீர்கள். உங்களை மறக்கவே மாட்டேன்’ என்றார். பதவிக்கு வந்ததும் என்னை மறந்துவிட்டார். சரி, மதிக்காத இடத்தில் இருப்பதைவிட, வெளியேறிப் போவது நல்லது என பாஜகவுக்கு வந்தேன். என் முதல் சாய்ஸ் அதிமுகதான். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் நான் யோசிக்காமல் சென்றிருப்பேன். ஆனால், எடப்பாடியுடன் போய் நிற்க வேண்டுமா என்று தவிர்த்துவிட்டோம். அந்த ஒரே காரணத்திற்காக பிஜேபி போனேன். அங்கே போனாலும் என்னை முழுமையான பாஜக ஆளாக யாரும் நம்பவில்லை. பாஜகவை நம்பி திமுகவை தைரியமாக எதிர்த்தேன். 32 நாட்கள் சிறைக்குப் போய் இருக்கிறேன். 16 வழக்குகள் என்மீது போடப்பட்டுள்ளன. என் வீட்டில் 2 முறை பெட்ரோல் குண்டு போட்டார்கள். நான் ஒரு வழக்கறிஞர். இதுவரை ஒரு குற்றவாளியை மனுப் போட்டுக்கூடப் பார்த்ததில்லை. என்னைக் கொண்டு போய் சிறையில் வைத்துவிட்டார்கள்.

எனவே, இன்றைக்கு இருக்கின்ற சூழலில் திமுகவிலிருந்து அழைப்பு வந்தால், போய்ச் சேர்ந்துவிடலாம் என்ற மனநிலையில்தான் இருக்கிறேன். அதேசமயம் அங்கே போனால் சுதந்தரமாகப் பேச விடுவார்களா என்றும் தெரியவில்லை. இன்று அதிமுகவுக்கே அடையாளம் இல்லை. அங்கே போய் நான் என்ன செய்ய முடியும்? பாஜகவிலிருந்து வெளியேறி அண்ணாமலை பற்றி விமர்சித்தால் என்னைக் குறை சொல்கிறார்கள். ஆனால், என் வலியை யாரும் ஏற்க தயாராக இல்லை. விபி துரைசாமி பாஜகவில் சேர்ந்தபோது 8 கோடி ரூபாய் கடனை அடைத்து கட்சியில் சேர்த்தார்கள். குஷ்புக்கு கையில் 3 கோடி, கடன் 4.5 கோடியை அடைத்து பாஜகவில் சேர்த்தார்கள். அதை மீறி எம்.எல்.ஏ., சீட்டு மற்றும் வாரிய தலைவர் தந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.