துணை முதல்வருக்கு பேனர்கள் வேண்டாம், கட்சி கொடி மட்டுமே கட்ட வேண்டும்: பொன்முடி!

“விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று, வழிகளில் எங்கேயும் கட் அவுட்டுகள், பேனர்கள் கட்ட வேண்டாம். கட்சி கொடி மட்டுமே கட்ட வேண்டும்” என்று திமுகவினருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தி உள்ளார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திண்டிவனத்தில் இன்று (நவ.2) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவரான செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் தலைமையேற்றார். இக்கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான .பொன்முடி கலந்து கொண்டு பேசியதாவது:-

வருகிற 5 மற்றும் 6-ம் தேதியில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். அவருக்கு திண்டிவனத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அதேபோல் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாக முகவர்களை நேரில் சந்தித்து இந்த மாதம் நடைபெற உள்ள வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாமில் புதிய வாக்காளர்களைச் சேர்க்க தீவிரம் காட்ட வேண்டும். மேலும், துணை முதல்வர் வருகைக்கு எங்கேயும் கட் அவுட்டுகள், பேனர்கள் கட்ட வேண்டாம். கட்சி கொடி மட்டுமே கட்ட வேண்டும். ஒரு வாரத்துக்கு முன்பாக நமது மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு கூடிய கூட்டத்தைவிட நாம் கூடுதலாக ஒன்று சேர்ந்து துணை முதல்வர் நிகழ்ச்சிகளில், பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பொன்முடி தவெக மாநாட்டை மறைமுகமாக விமர்சித்தது வெளிப்படையாகவே தெரிந்தது.