100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாளே உண்மையான சமூகநீதி நாள்: ராமதாஸ்

“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள். அந்த இலக்கை அடைய பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக உழைக்கும்” என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100% இடப்பங்கீடு வழங்குவதற்கான 1070 என்ற எண் கொண்ட சமூக அரசாணை 97 ஆண்டுகளுக்கு முன் சுப்பராயன் தலைமையிலான அரசில், கல்வித்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் அவர்களால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் இன்று. தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதி நிலைநிறுத்தப்பட்ட நாளில் அதற்கு காரணமானவர்களை போற்றுவோம், நன்றி கூறுவோம்.

1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி பனகல் அரசர் தலைமையிலான அரசின் 100% இடப்பங்கீடு வழங்குவதற்கான அரசாணை எண் 613 நிறைவேற்றப்பட்டாலும் இடப்பங்கீடு உடனடியாக நடைமுறைக்கு வந்து விடவில்லை. கிட்டத்தட்ட 7 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தான் சென்னை மாகாண மக்களுக்கு 100% இடப்பங்கீடு சாத்தியமானது. இந்தியா விடுதலையடைந்து 1950-ஆம் ஆண்டு வரையிலும் சில, பல குறைகள் இருந்தாலும் 100% இடப்பங்கீடு நடைமுறையில் இருந்தது. சமூகநீதிக்கு எதிரான சதிகாரர்களின் சூழ்ச்சியால் தான் 100% இடப்பங்கீடு நீதிமன்றங்களின் துணையுடன் வீழ்த்தப்பட்டது.

104 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, 97 ஆண்டுகளுக்கு முன் இடப்பங்கீட்டை சாத்தியமாக்கிய இந்த சமூகநீதி மண்ணில் தான் இன்று சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. சுயநலத்தாலும், அக்கறையின்மையாலும் அந்த முயற்சிக்கு தமிழக அரசும் துணை போய்க்கொண்டிருக்கிறது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 950 நாட்கள் ஆகும் நிலையில், அதற்காக திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் தொடங்கி சில மாதங்களுக்கு முன்பு வரை 50-க்கும் மேற்பட்ட தடவை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறி வந்த திமுக அரசு, திடீரென ஒரு நாள் நாங்களாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது; மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி, உழைக்கும் பாட்டாளி மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது. சமூகநீதி போர்வை போற்றி, சமூக அநீதிக்கு சாமரம் வீசும் ஆட்சியாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமுதாயங்கள் ஏராளமான உள்ளன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள். அந்த இலக்கை அடைய பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக உழைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.