எச்.ராஜாவின் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவின் பாஸ்போர்டை புதுப்பித்து தர உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் தேதி முடியும் தருவாயில், அதை புதுப்பிக்க கோரி மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த அதிகாரிகள், எனக்கு விளக்கம் கேட்டு கடந்த பிப்ரவரி 2 ம் தேதி நோட்டீஸ் அனுப்பினர்.

நான் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு மாநில பாஜகவின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளேன். எனவே என் மீது அரசியல் உள்நோக்கத்துடன் 2023-ம் ஆண்டு காளையார்கோவில் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் , பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுப்பது ஏற்புடையது அல்ல. எனவே எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் எச்.ராஜா கூறியிருந்தார்.

அந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி மனுவை அனுமதித்து உத்தரவிட்டார்.