2026-ல் மீண்டும் திமுக ஆட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“2026-ம் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி ஆட்சியமைக்கும்” என்று கோவையில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று செவ்வாய்க்கிழமை (நவ.5) கோவைக்கு வந்தார். கோவை விளாங்குறிச்சி சாலை, டைடல் பார்க் வளாகத்தில் உள்ள, தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர், இரவு 7 மணிக்கு போத்தனூரில் உள்ள பிவிஜி அரங்கில் நடந்த ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அதைத் தொடர்ந்து, கூட்ட அரங்கில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வெளியே வந்தார். அங்கிருந்து புறப்படும்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்கள் பல கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். அதனை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்துள்ளோம். கோவை சுற்றுப் பயணத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகச் சிறப்பாக இருந்தது. 2026-ம் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி ஆட்சியமைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மக்களின் வரவேற்பு இருந்தது. மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்கள் வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன். தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என்றார்.

திமுக கட்சி ரீதியாக மாவட்டங்கள் விரிவுபடுத்தப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “கட்சி குறித்த ஆலோசனை வெளியே கூற முடியாது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.