அரசியலமைப்பு விழுமியங்களை அழிக்க நினைக்கிறார் மோடி: பிரியங்கா

பாஜகவும் அதன் தலைவர் நரேந்திர மோடியும் சமத்துவத்தின் அரசியலமைப்பு விழுமியங்களை அழிக்க முயற்சிக்கின்றனர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்பி ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். இதனால் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா வயநாடு தொகுதியில் முதன்முறையாகக் களம் காண்கிறார். இதனிடையே கடந்த நான்கு நாள்களாக வயநாட்டில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரசாரத்தில் பாஜகவின் மீதான தனது தாக்குதலைத் தொடர்ந்துள்ளார் பிரியங்கா.

மலப்பூரம் மாவட்டம் வண்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட செருக்கோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு இன்று பிரியங்கா பேசினார். கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவால் நாட்டில் பிளவுபடுத்தும் அரசியலைக் கண்டதாகவும், உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்ப முயற்சிக்கிறது என்றும் கூறினார். பாஜக ஆட்சியின் கீழ், நாட்டில் விவசாயிகள் அல்லது நடுத்தர மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் “நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு” என்றும், அவை நிறைய வேலைவாய்ப்பை வழங்குகின்றன. ஆனால் விவசாயிகளைப் போலவே அவர்களுக்கும் ஆதரவு தேவை. வயநாடு மசாலாப் பொருள்கள் உள்ளிட்ட உயர்தர விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்தாலும், பல விவசாயிகளுக்கு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தான் ஒரு போராளி என்றும், வாய்ப்பு கிடைத்தால் வயநாடு மக்களுக்காக நாடாளுமன்றத்திலும் மற்ற எல்லா இடங்களிலும் போராடி அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படுவதை உறுதி செய்வேன். நான் இதிலிருந்து பின்வாங்க மாட்டேன், உங்களுக்காகப் போராடுவேன். ஏமாற்ற மாட்டேன் என்றும் அவர் கூறினார்.