ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு, ‘சட்டப்பேரவை தன் கடமையைச் செய்துள்ளது’ என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ஒருதலைபட்சமாக நீக்கப்பட்டது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் எந்த விதமான விவாதமும் இல்லாமல், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பின்பு பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் உமர் அப்துல்லா, “சட்டப்பேரவை தனது கடமையைச் செய்துள்ளது. இப்போது இதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான தீர்மானத்தை தேசிய மாநாடு கட்சி எம்எல்ஏ-வும், துணை முதல்வருமான சுரீந்தர் சவுத்ரி இன்று புதன்கிழமை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த தீர்மானத்தில், “ஜம்மு காஷ்மீர் மக்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியல் சாசன உத்தரவாதங்களை இந்த சட்டப்பேரவை மீண்டும் வலியுறுத்துகிறது. சிறப்பு அந்தஸ்து ஒருதலைபட்சமாக நீக்கப்பட்டது குறித்த கவலையை வெளிப்படுத்துகிறது. மறுசீரமைப்புக்கான எந்த ஒரு நடவடிக்கையும் தேசிய ஒற்றுமை மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களின் நியாயமான விருப்பங்கள் இரண்டையும் நிறைவேற்ற வேண்டும் என்று இந்த அவை வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் எதிப்புத் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், “இந்தத் தீர்மானம் இன்றைய அலுவல்களின் பட்டியலில் இல்லை. இதனை நாங்கள் நிராகரிக்கிறோம். எங்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் பட்டியலில் துணைநிலை ஆளுநர் உரை மீதான விவாதம் என்பது மட்டுமே இருந்தது” என்று தெரிவித்தனர். இந்தத் தீர்மானத்துக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால், சபாநாயகர் அப்துல் ரஹீம் ரதேர் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். பலத்த கூச்சலுக்கு மத்தியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் அவையின் மையத்துக்கு வந்து கூச்சலிட்டனர். இதனால், சாபாநாயகர் அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியபோது மீண்டும் கூச்சல் ஏற்பட்டதால், சபாநாயகர் மீண்டும் அவையை ஒத்திவைத்தார்.