சத்குரு ஜக்கி வாசுதேவ்க்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்மீகம், மனிதாபிமான சேவைகள் துறையில் ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு, பத்ம விபூஷன் விருது வழங்கி அவரை கெளரவித்தது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவின் மனைவி விஜி கொலை வழக்கில் அவருக்கு எதிராக காவல்துறை பதிவு செய்த வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல் சட்ட விதிகளை மீறி கோவை மாவட்டம் இக்கரைபோளுவாம்பட்டி கிராமத்தில் 1,25,000 சதுர மீட்டர் பரப்பளவில் சட்டவிரோதமாக பல கட்டிடங்களை கட்டியிருப்பதாகவும் இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் அந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டிருப்பதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே போல், வெள்ளயங்கிரி மலைப்பகுதியை ஆக்கிரமித்து பள்ளிக்கூடத்திற்கான கட்டிடத்தை சட்டவிரோதமாக கட்டியிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த சட்டவிரோத கட்டிடங்கள் மீது கோவை மாவட்ட நிர்வாகமும் நோட்டீஸ் அளித்து நடவடிக்கையும் எடுத்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஜக்கி வாசுதேவ்க்கு இந்திய அரசின் பாரத ரத்னா விருதிற்கு அடுத்து மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கியதை திரும்பப் பெற வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வெங்கடசுவாமி பாபு, மற்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் ஆஜராகி, ஜக்கி வாசுதேவுக்கு எதிராக எந்த ஒரு தவறான அறிக்கைகளையும், மத்திய புலனாய்வு நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு பெறவில்லை என வாதம் வைத்தார். மேலும் மனுதாரர் எந்த முகாந்திரமும் இல்லாமல் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் தனிப்பட்ட காரணங்களுக்கான வழக்கு தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றம் கருதுவதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.