காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி குதிரை பேரம்: சித்தராமையா குற்றச்சாட்டு!

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 50 பேரிடம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் தலா ரூ.50 கோடி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர் என்று சித்தராமையா கூறினார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள நர்சிபுராவில் ரூ.470 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

எனது தலைமையிலான கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் பொய் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி வருகிறது. பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 50 பேரிடம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் தலா ரூ.50 கோடி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

சில மூத்த எம்எல்ஏக்களிடம் அமைச்சர் பதவி தருவதாகவும் குதிரை பேரம் நடத்தியுள்ளனர். கடந்த காலத்தில் நடத்தியதைப் போலவே ஆப்ரேஷன் தாமரையை மீண்டும் கையிலெடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா கூறும்போது, ‘‘சித்தராமையாவிடம் ஆதாரம் இருந்தால் தைரியமாக வெளியிடட்டும். காங்கிரஸாரே அவரது ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள்” என்றார்.