சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேற்று திடீர் ரெய்டு நடத்தியது. அவரது மருமகன் விசிக ஆதவ் அர்ஜுனாவின் வீடுகளிலும் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த ரெய்டு இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
சிக்கிம் மாநிலத்தின் லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை செய்ததாகவும், இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக பணம் ஈட்டியதாகவும், கோவையின் மார்ட்டின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சொந்தமான வீடுகள், கெஸ்ட் ஹவுஸ், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் கடந்த 2019ல் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இதில் ரூ.910 கோடி அளவுக்கு அவர் அளவுக்கு அதிகமான வருமானம் ஈட்டியதாகவும், இதை கொண்டு 40 நிறுவனங்களில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறையினரும் ரெய்டு நடத்தினர். அடுத்தடுத்த அண்டுகளில் நடத்தப்பட்ட தொடர் ரெய்டுகளில் ரூ.451.7 கோடி அளவுக்கு சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த ரெய்டுகள் கடந்த ஆண்டு கூட நடந்தன.
இப்படி இருக்கையில், நேற்று திடீரென கோவையின் வெள்ளக்கிணறு, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில், துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அதேபோல சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது மருமகனும், விசிக துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் வீடு, மார்ட்டினின் மகன் வீடுகளிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கிய ரெய்டு நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. அதேபோல இன்று காலையிலும் ரெய்டு நீடித்து வருகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரெய்டு முழுமையடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளிவரும்.