நெல் கொள்முதலில் கார்ப்பரேட்களை அரசு அனுமதிக்கக் கூடாது: பி.ஆர்.பாண்டியன்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தலைமை செயலகத்தில் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை முடக்கும் நோக்கில், மத்திய அரசின் நுகர்வோர் கூட்டுறவு அமைப்பு மூலம் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், கார்ப்பரேட்களை நெல் கொள்முதலில் களமிறக்க மறைமுக சதி நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல், விவசாயிகளைத் திரட்டி, தீவிரப் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

அதேபோல, விவசாயிகளை அகதிகளாக்கும் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களைக் கையகப்படுத்துவது மட்டுமின்றி, நீர்வழிப் பாதைகளை அபகரிக்கவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. அரசின் வேளாண் விரோதக் கொள்கைகளை எடுத்துக் கூறும் விவசாய சங்கத் தலைவர்கள் மீது திமுகவினர் பொய் புகார்களை அளித்து வருகின்றனர். விவசாயிகள் தமிழகத்தில் வாழ்வதில் முதல்வருக்கு விருப்பமில்லை என்றால், வெளி மாநிலங்களுக்கு குடிபெயரவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.