உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்தும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை தர இறைவனை பிரார்த்திக்கிறோம். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு PMNRF-ல் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த துயர சம்பவத்துக்கு ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மிபாய் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட விபத்தில் பல பிறந்த குழந்தைகள் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த கொடூரமான துயரத்தைத் தாங்கும் சக்தியை குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் இறைவன் தருவானாக. காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள செய்தியில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியின் NICU வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தன. 16 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.