கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த ஜூலை மாதம் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். உயிரிழப்புக்கும், பொருள் இழப்புக்கும் உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை என்று சிபிஎம் மற்றும் காங்கிரஸ் சார்பில் நவ.19ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
தென்மேற்கு பருவமழையின் தொடக்க நாட்கள் அது. வழக்கமாக இம்மழை கேரளாவில் இருந்துதான் தொடங்கும். இந்த ஆண்டும் அப்படித்தான் நடந்தது. ஜூலை மாதம் மத்தியில் தொடங்கிய மழை, விட்டு விட்டு பெய்தது. ஜூலை 29ம் தேதி கேரளாவில் மழை தீவிரம் எடுத்தது. அடுத்த நாளும் பெய்த மழை காரணமாக வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழைக்காலங்களில் இப்பகுதியில் ஆங்காங்கே லேசான மண் சரிவு ஏற்படுவது சகஜம்தான். ஆனால் ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு இரண்டு கிராமங்களை அப்படியே மூழ்கடித்தது. நிலச்சரிவின் தீவிரம் பல மணி நேரம் கழித்தே உணரப்பட்டது. மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் களத்தில் இறங்கினர். ஆனால், அதற்குள் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின.
தொடக்கத்தில் 50-100 என உயிரிழப்பு இருந்தது. ஆனால் நேரம் போக போக உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியது. மொத்தமாக 400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிர் பிழைத்தவர்கள் வீடு வாசல், பொருட்கள், பணம், நகை என அனைத்தையும் இழந்து மாதக்கணக்கில் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் அவர்களுக்கு இயல்பான வாழ்க்கையை உருவாக்கி தர மாநில அரசு, நிலச்சரிவை மாநில பேரிடராக அறிவித்து போதுமான நிவாரண உதவிகளை வழங்கியது. ஆனாலும் கூடுதல் நிதி இருந்தால்தான் உயிர் பிழைத்தவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்பதால், மத்திய அரசு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் வலியுறுத்தியிருந்தார். மேலும் ரூ.3000 கோடி வயநாடு நிலச்சரிவுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மத்திய அரசு இதுவரை வெறும் ரூ.388 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. யானை பசிக்கு சோளப்பொறியா? என சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தன. ”
இப்படி இருக்கையில் மத்திய அரசு போதுமான நிதியை விடுவிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று கோரி சிபிஎம், காங்கிரஸ் சார்பில் நவ.19ம் தேதி வயநாட்டில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதும் மத்திய அரசு உரிய நிதியை விடுவிக்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.