பொய் பேசி மக்களை ஏமாற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதவி விலக வேண்டும்: பாஜக!

சுகாதாரத்துறை குறித்து பொய் பேசி மக்களை ஏமாற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் நிர்வாகம் சீரழிந்து வருவதும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொதுமக்கள் சரியான சிகிச்சைகள் பெற முடியாமல் அவதிப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழந்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியிலே கூறியபடி அரசு மருத்துவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது துறை செயலற்று கிடைப்பதை மறந்து, மறைத்து, செய்தியாளர் சந்திப்புகளில் வெற்று அறிவிப்புகளையும், பொய் பெருமைகளை பேசி, தமிழக மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், நிர்வாகத்தை சீரமைக்காமல் மருத்துவர்களையும், பொது மக்களையும் ஆபத்தில் சிக்க விடும் வகையில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதவி விலக வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, 9 கோடி மக்களின் நலத்தைப் பேணிக் காக்கும் வகையில் சென்னை அரசு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் உள்ளது போன்ற உயர் சிகிச்சை மருத்துவ வசதிகளை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.