நவம்பர் 19ம் தேதியான இன்று உலக ஆண்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் அருள்துமிலன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சில கோரிக்கைகளை வைத்துள்ளார். அதில் முக்கியமான கோரிக்கை என்னவென்றால். கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண், பெண் ஆகியோருக்கு சமமான தண்டனை கிடைக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வக்கீல் டி.அருள்துமிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கள்ளக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன. கள்ளக்காதலினால் குழந்தைகள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். இது தமிழர்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. அதனால், கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண், பெண் ஆகியோருக்கு சமமான தண்டனை கிடைக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் ஓர் ஆண்டிற்கு சுமார் 10 ஆயிரம் திருமணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த அவல நிலை தொடராமல் இருக்க, ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து இதற்கான உண்மை காரணம் குறித்து ஆராய்ந்து, திருமணமான ஆண்கள் தற்கொலை செய்வதை தடுக்க வேண்டும். தற்கொலைக்கு தூண்டும் மனைவிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆண்களுக்கு ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண்ணை உருவாக்கி அறிவிக்கவேண்டும். இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து ஆண்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.