மணிப்பூர் விவகாரத்தில் தலையிட ஜனாதிபதிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மணிப்பூர் விவகாரம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

மணிப்பூர் மாநில மக்கள் கண்ணியத்துடன், அமைதியாக வாழ்வதை உறுதி செய்வதற்காக இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும்.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த 18 மாதமாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில அரசும், மத்திய அரசும் தோல்வி அடைந்துள்ளன. மக்களின் துயரம் தொடர்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் ஜனாதிபதியாகவும், நமது அரசியலமைப்பின் பாதுகாவலராகவும் இருந்து, அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்தவும், மணிப்பூர் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும் நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். உங்கள் தலையீட்டின் மூலம் மணிப்பூர் மக்கள் மீண்டும் கண்ணியத்துடன், பாதுகாப்பாக வாழ்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.