ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அம்மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 41 செமீ மழை பதிவாகியுள்ளது.
நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராமேசுவரத்தில் 41 செமீ, தங்கச்சிமடத்தில் 32 செமீ மண்டபத்தில் 26 செமீ, பாம்பனில் 23 செமீ மழை பதிவானது. மாலை 5.30 மணி நிலவரப்படி பாம்பனில் 27 செமீ மழை பதிவானது. இதில் பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரையிலான 3 மணி நேரத்தில் ராமேசுவரத்தில் 36 செமீ, தங்கச்சிமடத்தில் 27 செமீ, பாம்பனில் 19 செமீ, மண்டபத்தில் 13 செமீ மழை பெய்தது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறும்போது, “மிக குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக்கூட்டங்கள் காரணமாக அங்கு மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது” என தெரிவித்தார்.
23-ல் காற்றழுத்த தாழ்வு பகுதிதென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 23-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுக்கூடும்.
21, 22-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 23, 24-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-ம் தேதி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 26-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, 25-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். 26-ம் தேதி டெல்டா, புதுக்கோட்டை மாவட்டம், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்யக்கூடும்.