முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவுக்கு ஆட்சியைத் தக்கவைக்கும் ராசியே கிடையாது என்றும் 2026இல் நிச்சயம் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே திமுகவும் அதிமுகவும் தான் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகிறது. 1967ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்த இரு கட்சிகளைத் தவிர வேறு யாரும் ஆட்சியைப் பிடித்தது இல்லை. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் கூட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி இருந்த நிலையில், அதை வீழ்த்தி திமுக ஆட்சியை அமைத்தது. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். அடுத்த சட்டசபைத் தேர்தல் 2026ம் ஆண்டு தான் நடைபெறும் என்ற போதிலும், இப்போதே தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. ஒரு பக்கம் ஆளும் திமுக தலைவர்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். மற்றொருபுறம் எதிர்க்கட்சியான அதிமுகவும் ஆளும் தரப்பு மீது சரமாரி புகார்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டன. இதனால் தமிழ்நாடு தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துவிட்டது.
இதற்கிடையே திருவள்ளூர் அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மதுரவாயல் அடுத்துள்ள வானகரம் பகுதியில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் கலந்து கொண்டனர். அதிமுக நிர்வாகிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்த தலைவர்கள், தேர்தல் காலத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மொத்தமாகச் சீர்குலைந்து விட்டது.. அதிமுக காலத்தில் நல்ல போலீஸ் இருந்தது. இதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இப்போதும் அதே போலீஸ் தான் என்றாலும் திமுக ஆட்சியில் போலீசின் கைகள் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. மக்களால் அமைதியாக வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திமுகவை பொறுத்தவரை எப்போதும் அவர்களால் ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது கிடையாது. தொடர்ந்து ஆட்சி அமைக்கும் ராசியே திமுகவிற்கு கிடையாது. இதனால் அடுத்து நடைபெறவுள்ள 2026 சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் அதிமுக தான் ஆட்சியை அமைக்கும். எம்ஜிஆர் காலத்தில் திமுக 13 ஆண்டுகள் வனவாசம் இருந்தது. அதேபோல் இப்போது திமுகவுக்கு நிரந்தரமாக வனவாசம் ஏற்படும்” என்றார்.
விசிக தலைவர் திருமாவளவன் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தனக்கும் கூட முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகக் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு ஜெயக்குமார், “ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும்.. அவரது ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை” என்று மட்டும் கூறினார்.