நெல்லையில் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2026 சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய இந்தக் குழுவினர், மாவட்டம் தோறும் சென்று கட்சிப் பணிகள் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் இந்தக் கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று நெல்லையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தின்போது நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் ராஜா மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் இன்றைய மோதல் மூலம் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.
அதிமுகவின் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் ராஜா உள்ளிட்டோர் சரியாகச் செயல்படவில்லை என முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளரும், தற்போதைய அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான பாப்புலர் முத்தையா குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு, மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் அது கைகலப்பாக மாறியது. நெல்லை மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா மற்றும் கொள்கை பரப்பு அணி இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவர் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அவர்கள் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.