உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
பாரதிய வித்யா பவனின் வருடாந்திர மார்கழி இசைத் திருவிழா-2024 தொடக்க நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவைத் தொடங்கி வைத்து ‘கதா கலாஷேபம்’ எனும் நூலை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
மார்கழி மாதம் இசைக்கும், ஆன்மிகத்துக்கும் உகந்த மாதம். கர்நாடக இசையானது உலகளவில் பாராட்டப்படக்கூடிய ஒன்றாகும். அத்தகைய இசை நமது அடையாளமாக இருப்பது பெருமையாகும். ஆன்மிகமும் கலாச்சாரமும்: பாரதம் என்பது ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப் பட்டது. பாரதத்தின் அடையாளம் சனாதனம். ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின்போது நமது கலாச்சாரம், ஆன்மிகம் உட்பட சிலவற்றை அழிக்க முயற் சித்தனர். அப்படி செய்துவிட்டால் அவை வரலாற்றில் இருந்து மறைந்துவிடும் என எண்ணினர். ஆனால், அது நிறைவேறவில்லை. நம் பாரதத்தையும், ஆன்மிகத்தையும் யார் நினைத்தாலும் அழிக்க முடியாது. பாரதமும், ஆன்மிகமும் இருப்பதனால் தான் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் சிறந்த நாடாக விளங்குகிறது.
நம்நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதலில் வந்த ஆட்சியாளர்கள் மதச்சார்பின்மையை பற்றி பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அப்போதைய ஆட்சியாளர்கள் ஐரோப்பிய மதச்சார்பின்மையைத்தான் பின்பற்றினர். ஐரோப்பிய கலாச்சாரத்தின் எண்ணங்கள் மற்றும் அதன் வழிகளையே பிரதானமாக நினைத்தனர். அதன் விளைவு, மாநிலங்களின் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகாரிகளின் பொறுப்புகள் அதிகரித்தன. இவற்றை பொதுமக்கள் ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.