எல்லா மாநில மக்களும் பிரதமர் நரேந்திர மோடியை நம்புறாங்க: தமிழிசை!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளின் படி, அனைத்து மாநிலங்களிலும் பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நல திட்டங்களின் மீதும் நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களிக்கின்றார்கள், இந்த நம்பிக்கையை தமிழக மக்களும் பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என கூறியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை செளந்தரராஜன்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றியை தொடர்ந்து தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது:-

முதலில் இரண்டு மாநில மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம், இதில் பெரிய மாநிலமான மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் ஆட்சி அறுதி பெரும்பான்மையுடன் நடக்க இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மகாராஷ்டிரா மற்ற மாநிலங்களில் இருந்து ஒரு வேறுபட்ட மாநிலம். பாரத தேசத்தில் உள்ள அனைத்து மக்களும் அங்கே பணிபுரிபவர்கள், வசிப்பவர்கள். எனவே மகாராஷ்டிராவை ஒரு சின்ன பாரத தேசம் என்றே கூட சொல்லலாம். மகாராஷ்டிராவில் பாரதிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி பாரத தேசம் முழுவதும் உள்ள கருத்து என்று எடுத்து கொள்ளலாம். மகாராஷ்டிரா வெற்றி ஒரு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம்.

பிரதமரின் திட்டங்களும் மாநில அரசின் திட்டங்களும் டபுள் இன்ஜின் கவர்மெண்ட் இருந்தால் மக்களுக்கு எப்படி பலன் தரும் என்பதை மகாராஷ்டிரா நிரூபித்து மீண்டும் வெற்றியை பெற்று இருக்கிறோம். தமிழ்நாட்டில் பெண்கள் பயணத்திற்கு உதவி செய்கிறோம். ஆனால் வாழ்க்கை பயணத்திற்கு உதவி செய்வதற்காக ஏறக்குறைய 7 லட்சம் பெண்களை லட்சாதிபதியாக்கிய பிரதமர் அந்த திட்டத்தை நாங்கள் தொடங்கி வைத்தார். ஆகவே பாஜகவின் இலவச சட்டங்கள் இருந்தாலும் அது வாழ்வாதாரத்தை பெருக்கின்ற இலவச திட்டங்களாக இருக்கின்றது என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும். ராகுல் காந்தியின் பிரச்சாரம் இண்டி கூட்டணிக்கு முற்றிலுமாக தோல்வியை அடைந்திருக்கிறது. இந்தியாவின் பிரதமராக இருக்கக்கூடியவரை குஜராத்தில் வெற்றி பெற வேண்டுமா என்ற குறுகிய மனப்பான்மையோடு அவர்கள் செய்த பிரச்சாரம் எடுபடவில்லை என்பதை நான் பதிவு செய்கிறேன். இதனால் மகாராஷ்டிராவின் வெற்றி ஒட்டுமொத்த பாரத தேசமும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிக்கு ஆதரவு தருவது என்பதை குறியீடாக நான் பார்க்கிறேன் .

ஜார்கண்டை பொருத்தவரையில் இதற்கு முன்பு இருந்த 24 இடங்களை விட 29 தொகுதிகளுக்கு அதிகமாக வாக்குகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம் ஆகவே ஜார்கண்டிலும் எங்களுக்கு வெற்றி தான் என்று சொல்ல முடியும். ஜார்க்கண்ட் பொறுத்த வரையில் ஊழல் மலிந்திருக்கின்ற முதலமைச்சர் மீண்டும் வெற்றி பெறுகிறார். ஊழல் வழக்கினால் அவர் கைதானது அங்கே பச்சாதாபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அங்கே உள்ள மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக வாக்கு சதவீதத்தை கொடுத்திருக்கிறார்கள். நாடு முழுவதும் நடந்த இடைத்தேர்தல் பிரதமரின் எடை தேர்தலாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உபியில் ஒன்பது இடங்களில் 7 இடங்களில் பாஜக வென்று இருக்கிறது. அதேபோல கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று கொண்டிருக்கிறது. கேரளாவில் வயநாடு வெற்றி அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் பிரியங்கா காந்தியின் வெற்றி இண்டி கூட்டணியின் முடிவு என்றுதான் சொல்ல முடியும்.. பிரியங்கா காந்தி வேண்டுமென்றால் அங்கே வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் இண்டி கூட்டணி அந்த தோல்வி அடைந்திருக்கிறது.

பிரியங்கா காந்தி பாராளுமன்றத்திற்கு சென்றது அப்பட்டமான வாரிசு அரசியல் வெளிப்பாடு என்று தெரிகிறது. வயநாட்டில் வெற்றி பெற்றது என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் ராகுல் காந்தி வயநாடு மக்களை ஏமாற்றினார். மறுபடியும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் எந்த தொகுதியாக இருந்தாலும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இது வாங்கப்பட்ட வெற்றி என்பதும் அந்தக் கூட்டணியில் பிரிவினையை ஏற்படுத்தி வாங்கப்பட்ட வெற்றி என்பது நான் பதிவு செய்கிறேன். அனைத்து மாநிலங்களிலும் பாஜக மீதும் பிரதமரின் திட்டங்களின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களிக்கின்றார்கள். இந்த நம்பிக்கையை தமிழக மக்களும் பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. 2026 இல் அந்த நம்பிக்கையை வைத்து எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நினைக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.