“கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். இதைவிட பெரிய கருத்து மோதல்கள் எல்லாம் நடந்துள்ளது. எனவே, இதை ‘டேக் இட் ஈஸி’-ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று நேற்று மதுரையில் அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் நடந்த சலசலப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை திருமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் நேற்று திங்கள்கிழமை இரவு கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திருமங்கலம் எம்எல்ஏ, ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
234 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவின் பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் தலைமையில் கள ஆய்வு நடைபெறுகிறது. உறுப்பினர் சீட்டு முழுமையாக சென்றடைந்துள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். ஒன்பது பேர் கொண்ட குழுவாக வாக்குச்சாவடி கிளை கழகம் அமைக்க வேண்டும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எம்ஜிஆர் மற்றும் ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை போல ஜெயலலிதாவின் நூற்றாண்டு விழாவையும் முதல்வராக அவர் நடத்தக்கூடிய காலம் வரும். திமுகவில், வாய் பூட்டு சட்டம் போடப்பட்டுள்ளது. அந்த கட்சியில் அப்பா அல்லது மகன் மட்டும்தான் பேசுவார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. அதிமுக தனது கட்டமைப்பை வலிமைப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ளோம்.
கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். இதைவிட பெரிய கருத்து மோதல்கள் எல்லாம் நடந்துள்ளது. எனவே, இதை டேக் இட் ஈஸி-ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஆணவத்தின் உச்சிக்கு சென்று விட்டார். அனைவரையும் வேலை இல்லை என்று தான் பேசுகிறார். அவருக்கு தான் வேலை இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் தான் அவருக்கு எல்லாம் புரியும். அதனால் தான் எதிர்க்கட்சித் தலைவர் பரிசை அவருக்கு அளிப்போம் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.