பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரால் தமிழ்நாடு அரசுக்கு இடர்பாடு ஏற்படுகிறது என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி இன்று நடந்தது. இதனை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு கலை அறிவியல், பொறியியல், கல்வியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை இணையவழியில் ஔிவுமறைவற்ற முறையில் நடத்த முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி, இணையவழியில் 377 ஆசிரியர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, தகுதியான 198 பேருக்கு இன்று பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டது. பல்வகை தொழில்நுட்ப கல்லூரியில் 285 மனுக்கள் பெறப்பட்டு, 93 பேருக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளையேற்று திறந்த மனதுடன், எந்தவொரு முறைகேடும் இல்லாத நிலையில், ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனத்தை பொறுத்தவரை ஆளுநராலும், ஒன்றிய அரசாலும் எந்த வகையில் தமிழ்நாடு அரசுக்கு இடர்பாடு ஏற்படுகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சுமூகமான முடிவெடுத்து மாநில உரிமையை பேணி காக்க வேண்டும். அதன்படி அந்த பணிகள் எல்லாம் விரைவில் முடியும். மாநிலத்தில் ஆசிரியர், மாணவர்கள் நலன் பேணிக்காக்க வேண்டும் என்பதில் முதல்வர் கவனமாக இருந்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.