ராகுலுக்கு வேறொரு நாட்டில் குடியுரிமை: வழக்கின் விசாரணை டிச. 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் நாட்டிலும் குடியுரிமையை வைத்திருப்பதாகக் கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு முக்கியமான பதிலை அளித்துள்ளது. வழக்கின் விசாரணை டிச. 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் உள்ள சட்டப்படி இந்தியக் குடியுரிமை பெற்ற ஒருவர் வேறு ஒரு குடியுரிமையைப் பெற முடியாது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இரட்டை குடியுரிமையை சட்டப்பூர்வமாக அனுமதித்தாலும் இந்தியச் சட்டம் அதை அனுமதிப்பதில்லை. எனவே, ஒருவர் வேறு ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற விரும்பினால் அவர் இந்தியக் குடியுரிமையைத் துறக்க வேண்டும். இதற்கிடையே கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான விக்னேஷ் ஷிஷிர் என்பவர் ராகுல் காந்தி சட்டவிரோதமாக இரட்டை குடியுரிமை வைத்து இருப்பதாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விஎஸ்எஸ் சர்மா என்பவர் பிரிட்டன் நாட்டில் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் மெயில்களை வைத்துப் பார்க்கும் போது ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமையை வைத்துள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதாக விக்னேஷ் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த மனுவில் மேலும், “ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்த தகவல்களைப் பெறச் சர்மா கடந்த 2022இல் பிரிட்டன் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அப்போது சில தகவல்களைப் பிரிட்டன் அரசு உறுதி செய்தது. அதேநேரம் அங்குள்ள தகவல் பாதுகாப்பு சட்டத்தைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இந்த தகவல்களைக் கோராததால் இது தொடர்பாகப் பகிரங்கமாகத் தகவல்களைப் பகிர மறுத்துவிட்டனர். எனவே, ராகுல் காந்தியிடம் இரட்டை குடியுரிமை இருப்பது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி அட்டாவ் ரஹ்மான் மசூதி மற்றும் நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி.பாண்டே, “சம்மந்தப்பட்ட நபரின் புகார் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது. அது தொடர்பாகப் பரிசீலித்து வருகிறோம்” என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை குறித்துக் கொண்ட நீதிபதிகள், அடுத்த விசாரணைக்குள் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து உரியப் பதிலைப் பெற்றுத் தருமாறு பாண்டேவுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். மேலும், தற்போது மனு தாரரின் புகாரைப் பெற்று உள்துறை அமைச்சகம் செயல்பட்டதா என்பது குறித்து மட்டுமே விசாரணையில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவரது கோரிக்கை அல்லது புகார் குறித்து இப்போது விசாரிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிச. 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பிரிட்டன் அதிகாரிகள் சொன்னதை வைத்துப் பார்க்கும் போது ராகுல் காந்தி இரட்டை குடியுரிமையை வைத்து இருப்பதாகவும் இதனால் அவரது இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார் வழக்கைத் தொடர்ந்த விக்னேஷ்.. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது பிரிவின்படி, எந்தவொரு தனிநபரும் ஒரே நேரத்தில் இந்தியக் குடியுரிமையையும் மற்றொரு நாட்டின் குடியுரிமையையும் கொண்டிருக்க முடியாது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணையில் உள்ள நிலையில், பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இதேபோன்ற மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதேநேரம் ஏற்கனவே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வருவதால், அந்த வழக்கு விசாரணை முடிந்த பிறகு இந்த வழக்கை விசாரிப்பதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.