ஜனாதிபதி திரவுபதி முர்மு ஸ்ரீரங்கம் பயணம் ரத்து!

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஸ்ரீரங்கம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

4 நாட்கள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகத்திற்கு நேற்று வந்தார். அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்த அவரை அமைச்சர் மெய்யநாதன், கோவை கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து ஜனாதிபதி ராஜ்பவனில் ஓய்வெடுத்தார். இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். முன்னதாக அவர் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்கிறார்.

நாளை(வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில், நீலகிரியில் உள்ள 6 வகை பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்களின் பாரம்பரிய நடனம் நடைபெறுகிறது. நீலகிரி பழங்குடியின மக்களின் தலைவர் ஆல்வாஸ் பழங்குடி மக்களின் சிறப்புகள் குறித்து ஜனாதிபதியிடம் பேசுகிறார். மேலும் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உணவு அருந்த உள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 30-ந்தேதி திருவாரூருக்கு சென்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் பஞ்சகரை யாத்திரிகர் நிவாஸ் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறங்கி அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதாக இருந்தது. தற்போது, தொடர் மழை காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஸ்ரீரங்கம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.