தமிழகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமான ஊட்டி ‘தேவாலா மலர்கள் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.70.23 கோடி நிதி ஒதுக்கியுள்ள பிரதமர் மோடிக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான நமது அரசாங்கம், சீரிய தொலைநோக்கு பார்வை கொண்ட, ₹3,295 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய சுற்றுலாத்துறையை சர்வதேச தரத்தில் தரம் உயர்த்துவதன் மூலம், நமது பாரத தேசத்தின் பழமை வாய்ந்த கலாச்சார செரிவினை, உலகம் முழுமைக்கும் கொண்டு செல்கின்ற வகையில், 23 மாநிலங்களை உள்ளடக்கிய இந்த வளர்ச்சித் திட்டத்தில், தமிழகமும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ‘நந்தவனம் பாரம்பரிய பூங்கா’ பகுதியின் மேம்பாட்டிற்கு 99.67 கோடி ரூபாய் மற்றும் தமிழகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமான ஊட்டி ‘தேவாலா மலர்கள் பூங்கா’ பகுதியின் மேம்பாட்டிற்கு 70.23 கோடி ரூபாய் என்று, தமிழகத்திற்கு ஏறத்தாழ 170 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கு, பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக மக்கள் அனைவரது சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.