கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தயாராக உள்ளதாக தமிழக அரசு தகவல்!

புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர் என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் மேற்கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழக முதல்வர் கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று (நவ.29) காலை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு வந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இன்று (நவ.29) காலை 8.30 மணி வரை சராசரியாக சென்னை 2.7 செ.மீ., செங்கல்பட்டு 0.76 செ.மீ., மயிலாடுதுறை 0.71 செ.மீ., திருவள்ளூர் 0.64 செ.மீ., நாகப்பட்டினம் 0.40 செ.மீ., திருவாரூர் 0.3 செ.மீ., காஞ்சிபுரம் 0.16 செ.மீ., தஞ்சாவூர் 0.09 செ.மீ., கடலூர் 0.06 செ.மீ. உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.குறிப்பாக, சென்னை – சாத்தாங்காடு 6.1 செ.மீ., எர்ணாவூர் 5.8 செ.மீ., செங்கல்பட்டு – பல்லாவரம் 2.92 செ.மீ., செம்மஞ்சேரி 2.4 செ.மீ. திருவள்ளூர் – திருப்பாலைவனம் 2.56 செ.மீ., திருவெள்ளைவாயில் 2.56 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

நிவாரண முகாம்கள்: அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு உபகரணங்கள்: நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், 1193 JCB-கள், 806 படகுகள், 977 ஜெனரேட்டர்கள், 1786 மர அறுப்பான்கள் மற்றும் 2439 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

மீட்புப் படை: ஏற்கெனவே நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று (நவ.29) செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 1 குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா 1 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள்: மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கும் நவ.23ம் தேதியன்று, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற 4153 படகுகள் கரை திரும்பியுள்ளன.

கண்காணிப்பு அலுவலர்கள்: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, இன்று (நவ.29) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். இந்த ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர் வ. மோகனச்சந்திரன், உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.