வட தமிழ்நாட்டின் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகள் பெருமழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நோக்கி செல்லக் கூடிய தென் மாவட்ட ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், “இன்று இரவு சென்னையிலிருந்து புறப்படும் ரயில்கள் அனேகமாக ரத்தாக வாய்ப்பில்லை; தேவைப்பட்டால் புறப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் என்று மதுரை சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளதாவது:-
காலையிலிருந்து ரயில் பயணிகள் மற்றும் பயணிகளின் உறவினர்களிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு புறம் பயணிகளுடனும் இன்னொரு புறம் தெற்கு இரயில்வேயின் தலைமையகத்துடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். யாரும் பதட்டமடைய வேண்டாம். ரயில்வே நிர்வாகம் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து நிலமையை திறம்பட கையாண்டு வருகின்றனர். என்பதை பயணிகளுக்கு தெரிவித்தபடி உள்ளேன். ரயில்வே நிர்வாகம் பிற்பகல் 3 மணிக்கு தெரிவித்த நிலைமையை கீழே பதிவிட்டுள்ளேன். கீழே உள்ள இரயில்கள் தவிர தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பிற ரயில்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளன. விரைவில் அவைகள் அனைத்தும் நிறைவிடத்துக்கு வந்து சேரும்.
சென்னை விழுப்புரம் இடையே உள்ள முக்கிய வழித்தடம் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் சரி செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கையோடு தெரிவித்தனர். எனவே இன்று இரவு சென்னையிலிருந்து புறப்படும் இரயில்கள் அனேகமாக ரத்தாக வாய்ப்பில்லை. தேவைப்பட்டால் புறப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் என்பதை தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு வண்டி இப்பொழுது வாலாஜா ரோடு கடந்துள்ளது. காலை உணவு திருக்கோயிலூர் மக்கள் தந்தனர். காட்பாடியில் அவரவர் வாங்கிக் கொண்டனர். என்று இரயில் பயணிகள் தெரிவித்தனர். ஒரு புறம் நிலமையை திறம்பட கையாள பெருக்கெடுத்தோடும் நீருக்கு நடுவே நின்று தண்டவாளங்களை சரி செய்து கொண்டிருக்கும் இரயில்வே ஊழியர்கள். மற்றும் விழிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் இரயில்வே அலுவலர்கள். மறுபுறம், எங்கெங்கோ சென்றபடி நகரும் ரயிலுக்குள் நிலமையை சமாளித்து பயணித்துக் கொண்டிருக்கும் பயணிகள். இரு முனைகளின் குரல்களையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். பெரும் புயலும், பேரிடரும் சந்தித்து மீளும் வலிமையே மனிதத்தின் தனித்துவம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.