பிரியங்கா காந்தி கொண்டு வந்த ‘அதானி- மோடி’ ஜோல்னா பை!

நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, அதானி- மோடி படங்களை அச்சிட்ட பையுடன் வருகை தந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதானி – மோடி பை பை என்ற வாசகமும் இந்த பையில் இடம் பெற்றிருந்தது. பிரியங்கா காந்தி எம்பியின் இந்த பையை பாராட்டினார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 20-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்தே அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உபி. சம்பல் வன்முறை உள்ளிட்டவைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் அமளிக்கு இடையே சிறிது நேரம் நடைபெற்றாலும் பெரும்பாலும் முடக்கப்பட்ட நிலையில்தான் இருந்து வருகிறது. இன்றும் நாடாளுமன்ற சபைகள் முடங்கி இருக்கின்றன. அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் நாள் தோறும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது, அதானி- மோடி முகமூடிகளை காங்கிரஸ் எம்பிக்கள் அணிந்திருந்தனர். அவர்களை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்யும் வகையில் ஓரங்க நாடகத்தை அரங்கேற்றினார்.

இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தி முழக்கமிட்டனர். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளரும் வயநாடு லோக்சபா தொகுதி எம்பியுமான பிரியங்கா காந்தி ஜோல்னா பை (தோள் பை) ஒன்றுடன் வருகை தந்தார். அந்த பையில் அதானி- மோடி படங்கள் ஒரு பக்கம் அச்சிடப்பட்டிருந்தன; பையின் மற்றொரு பகுதியில் அதானி- மோடி பை பை என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. பிரியங்கா காந்தியின் இந்த பை, இந்தியா கூட்டணி எம்பிக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அப்போது, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் பையை பார்த்து பாராட்டினார். அத்துடன் இந்த பையை வடிவமைத்தது யார்? என்பது குறித்தும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டார்.