நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை: தர்மேந்திர பிரதான்!

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் மருத்துவ படிப்பை படிக்க வேண்டும் என்றால் நீட் எனும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நாடு முழுவதும் இந்த நீட் தேர்வு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் தற்போது வரை அவர்களின் முயற்சி வெற்றியடையவில்லை. இந்த நீட் தேர்வை என்டிஏ (NTA or National Testing Agency) எனும் தேசிய தேர்வு முகமை தான் நடத்தி வருகிறது. இந்த தேசிய தேர்வு முகமை என்பது மத்திய உயர்கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் தனித்து (Autonomous) இயங்கும் ஒரு அமைப்பாகும். இந்த தேசிய தேர்வு முகமை என்பது உயர்கல்வி பயில்வதற்கான நுழைவு தேர்வு மற்றும் மத்திய அரசு துறைகளில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கான தேர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் முறைகேடு புகார்கள் எழுந்தன. குறிப்பாக பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இத்தகைய சூழலில் தான் நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வரும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறியதாவது:-

2025ம் ஆண்டில் தேசிய தேர்வு முகமை மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. தேசிய தேர்வு முகமையில் புதிதாக 10 பதவிகள் உருவாக்கப்பட உள்ளது. 2025ல் இருந்து தேசிய தேர்வு முகமை சார்பில் உயர்கல்விக்கான நுழைவு தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும். மத்திய அரசு பணிக்கான போட்டி தேர்வுகள் இனி நடத்தப்படாது. நீட் தேர்வை பேனா -பேப்பருடன் இப்போது இருப்பது போல் நடத்துவதா அல்லது ஆன்லைனில் மேற்கொள்வதா? என்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார். இதனால் நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.