கேரளாவில் இருந்து கொண்டு​ வரப்பட்டு நெல்லை அருகே கொட்டப்​பட்ட மருத்துவ கழிவுகள்!

கேரள மாநிலத்​தில் இருந்து அபாயகரமான மருத்​துவக் கழிவுகளை வாகனத்​தில் கொண்டு வந்து நெல்லை அருகே​யுள்ள நீர்​நிலைகளில் கொட்​டியது மக்களிடையே அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

திரு​வனந்​த​புரத்​தில் உள்ள மண்டல புற்று நோய் மையத்​திலிருந்து வாகனத்​தில் கொண்டு​வரப்​பட்ட அபாயகரமான மருத்​துவக் கழிவு​கள், நெல்லை மாவட்டம் நடுக்​கல்​லூர், கோடகநல்​லூர் பகுதி​களில் உள்ள நீர் நிலைகளில் கொட்​டப்​பட்​டுள்ளன. மேலும், கழிவுகள் அடங்கிய மூட்​டைகளில், புற்று​நோய் மையத்​தில் அனுமதிக்​கப்​பட்ட நோயாளி​களின் விவரங்கள் அடங்கிய படிவங்​களும் இருந்தன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்​களில் பரவி அதிர்ச்​சியை ஏற்படுத்​தின.

மருத்துவக் கழிவுகளை கொட்டி நீர்​நிலைகள் மற்றும் வயல்​வெளிகளை மாசுபடுத்தி உள்ளதாக சுத்​தமல்லி போலீ​ஸில், பழவூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்​துவக் கழிவுகள் கொட்​டப்​பட்​டுள்ள தனியார் இடத்தின் மேற்​பார்​வை​யாளர் புகார் செய்​தனர். இதையடுத்து, போலீ​ஸார் 3 பிரிவு​களில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்​கொண்டு வருகின்​றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை ஆட்சியர் கா.ப.​கார்த்தி​கேயன் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், “கோடகநல்​லூர் பகுதி​யில் மருத்​துவக் கழிவுகள் கொட்​டப்​பட்​டுள்ளது தொடர்​பாக, சுற்றுச்​சூழல் பாது​காப்பு சட்டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்டு, விசாரணை நடத்​தப்​பட்டு வருகிறது. தமிழ்​நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்​சித் துறை மூலம் மருத்​துவக் கழிவுகளை ஆய்வுக்கு உட்படுத்​திட​வும், அவற்றை தகுந்த முறையில் அகற்​ற​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருகிறது. மருத்​துவக் கழிவுகளை பொது இடங்​களில் கொட்​டக்​கூடாது என்று அறிவிப்பு வெளி​யிடப்​பட்ட நிலை​யில், இது போன்ற செயலில் ஈடுபட்​ட​வர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்” என்று தெரி​வித்​துள்ளார்.

குமரி – கேரள எல்லையான நெட்டா சோதனைச் சாவடி​யில் நேற்று போலீ​ஸார் வாகன சோதனை​யில் ஈடுபட்​டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினிடெம்​போவை நிறுத்தி சோதனையிட்​ட​தில், அதில் உணவுக் கழிவுகள் இருப்பது தெரிய​வந்​தது. இதையடுத்து, அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீ​ஸார், ஓட்டுநர் தக்கலை சுதிஷ் (24), டெம்போ உரிமை​யாளர் அஜித் (27) ஆகியோரை கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடு​வித்​தனர்.