அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மத்திய அமைச்சரவையில் அமித்ஷா நீடிக்கவே கூடாது; அமித்ஷா மன்னிப்பு கேட்டுதான் ஆக வேண்டும்; அண்ணல் அம்பேத்கருக்காக நாட்டு மக்கள் எந்தவித தியாகத்துக்கும் தயாராகவே உள்ளனர் என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
எங்களுடைய கோரிக்கை அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான். பிரதமர் நரேந்திர மோடி, அண்ணல் அம்பேத்கர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தால் அமித்ஷாவை நள்ளிரவுக்குள் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவையில் அமித்ஷா நீடிக்க தார்மீக தகுதியே இல்லை. நாட்டு மக்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள்.. அமித்ஷாவை அமைச்சர் பதவியில் இருந்து விரட்டியடிப்பார்கள்.. நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்.. நாட்டு மக்கள் அண்ணல் அம்பேத்கருக்காக அனைத்துவித தியாகங்களுக்கும் தயாராகவே உள்ளனர். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் மல்லிகார்ஜூன கார்கே சந்தித்தார். அப்போது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடனிருந்தார். இந்த சந்திப்பின் போதும் அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பின்னரே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பிரதமர் மோடிக்கு கெடு விதித்தார் மல்லிகார்ஜூன கார்கே.