வேலூர் மாவட்ட பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இதில் சம்மந்தப்பட்ட திமுகவினரை பாதுகாக்காமல் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம், கே.வி குப்பம் நாகல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விட்டல் குமார் (வயது 47). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னாங்குப்பம் பகுதியில் ரத்த வெள்ளத்தில் இருந்தார். அவரின் உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் விட்டல் குமார் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விட்டல் குமார் பாஜக நிர்வாகி என்பதால் இது அரசியல் கொலை என்று பாஜகவினர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ் குமார், கமலதாசன் ஆகிய இரண்டு பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வேலூர் பாஜக ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகி விட்டல் குமார், கடந்த 16 ஆம் தேதி திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விட்டல் குமார் நீண்ட காலமாக பொதுமக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தவர். அவருக்கும், வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் மேற்கு ஒன்றியம், நாகல் ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டு என்ற நபருக்கும், பலமுறை வாக்குவாதங்கள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. விட்டல் குமார் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, மாவட்ட பாஜகவினர் போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில், திமுக ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டுவின் மகனின் வாகன ஓட்டுநரும், அவரது நண்பரும், இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இதிலிருந்து விட்டல்குமார் படுகொலையில் திமுக நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. திமுகவோ, தனது கட்சியில் சமூக விரோதிகளுக்குப் பதவியும் அதிகாரமும் கொடுத்து வருகிறது. உடனடியாக விட்டல் குமார் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் கட்சிக்காரர்கள் என்பதற்காக சமூக விரோதிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அதற்கான எதிர்வினைக்கும் திமுகவே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் சம்மந்தப்பட்ட திமுகவினரை பாதுகாக்காமல் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.