அஸ்வினுக்கு கேல்ரத்னா விருது வழங்க வேண்டும். அஸ்வின் செய்துள்ள சாதனைகளுக்கு எத்தகைய உயரிய விருதும் தகுதியானதுதான் என விஜய்வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரராக விளங்கி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின். டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் என அனைத்து வடிவிலான போட்டிகளிலும் இந்தியாவுக்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், தனது திறமையான பேட்டிங் வாயிலாகவும் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.
அஸ்வின் என்ற மந்திரச் சொல் எதிரணிகளை நிலை குலைய செய்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளது. பல சாதனைகளை படைத்த நம்ம சென்னையை சேர்ந்த அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது. இவ்வளவு திறமை வாய்ந்த வீரர் தனது புகழின் உச்சியில் ஓய்வை அறிவித்தது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரருக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதினை மத்திய அரசு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அஸ்வின் செய்துள்ள சாதனைகளுக்கு எத்தகைய உயரிய விருதும் தகுதியானது தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அஸ்வினுக்கு கேல்ரத்னா விருது வழங்க கோரி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் விஜய்வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.