வேலூர் இந்தியர்களுக்கு வீரம்மிக்க நிலமாகும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்​தி​யர்​களுக்கு வேலூர் வீரம் மிகுந்த, புண்ணிய நிலமாகும் என்று ஆளுநர் ஆர்.என்​.ரவி கூறினார்.

முப்படை ஓய்வூ​தி​ய​தா​ரர்​களுக்கு வருடாந்திர உயிர்ச் சான்று அடையாளம் காணவும், ஓய்வூ​தியம் சார்ந்த குறை​களைத் தீர்க்​க​வும் வேலூர் விஐடி அண்ணா அரங்​கில் நேற்று ‘ஸ்பர்ஸ்’ விளக்கம் மற்றும் குறைதீர் முகாம் நடைபெற்​றது. சென்னை பாது​காப்பு கணக்​குகள் கட்டுப்​பாட்​டாளர் அலுவல​கம், தென் பிராந்திய ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் வேலூர் மாவட்ட முன்​னாள் படைவீரர் நலச் சங்கம் சார்​பில் நடைபெற்ற இந்நிகழ்ச்​சி​யில் ஆளுநர் ஆர்.என்​.ரவி சிறப்பு விருந்​தினராக பங்கேற்​றார். சிறப்பு பாது​காப்பு கணக்​குகள் துறைத் தலைவர் மயாங்க் ஷர்மா, தென்​பிராந்திய ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் கரண்​பீர்சிங் பிரார், இந்திய கடலோர காவல் படை டிஐஜி தினகரன் முன்னிலை வகித்​தனர். சென்னை பாது​காப்பு கணக்​குகள் கட்டுப்​பாட்​டாளர் ஜெயசீலன் வரவேற்​றார். ஆளுநர் ஆர்.என்​.ரவி பேசி​ய​தாவது:-

தேசப் பாது​காப்​பில் வேலூர் முக்கிய இடம் வகிக்​கிறது. இங்குள்ள ராணுவப்​பேட்டை என்ற கிராமத்​தில் மட்டும் 4,000-க்​கும் மேற்​பட்ட முன்​னாள் ராணுவ வீரர்கள் உள்ளனர். 1857-ல் தான் முதல் சுதந்​திரப் போராட்டம் தொடங்​கியதாக கூறுகின்​றனர். ஆனால், அதற்கு 51 ஆண்டு​களுக்கு முன்பே 1806 ஜூலை 10-ம் தேதி வேலூரில் ஆங்கிலேயர் படையில் இருந்த 1,000-க்​கும் மேற்​பட்ட இந்திய வீரர்கள் நடத்திய புரட்​சி​யில், 200-க்​கும் மேற்​பட்ட ஆங்கிலேய அதிகாரி​கள், வீரர்கள் கொல்​லப்​பட்​டதுடன், பலர் பலத்த காயமடைந்​தனர். இதை ஆங்கிலேயர்கள் தெளிவாகப் பதிவு செய்​துள்ளனர். அவர்கள் இதை கலகம் என்று குறிப்​பிட்​டுள்​ளனர். ஆனால், அது கலகம் இல்லை புரட்சி. இதுதான் முதல் இந்திய சுதந்​திரப் போராட்​டம். வேலூர் இந்தி​யர்களுக்கு வீரம்மிக்க, புண்ணிய நிலமாகும். முன்​னாள் படைவீரர்கள் இந்த நாட்​டின் சொத்து. அவர்​களால் தேசம் பெருமை கொள்​கிறது. இவ்வாறு ஆளுநர் பேசினார்.

முகாமில், 2000-க்​கும் மேற்​பட்ட முப்படை ஓய்வூ​தி​ய​தா​ரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூ​தி​ய​தா​ரர்கள் கலந்து கொண்​டனர். ரூ.1 கோடி மதிப்​பிலான ஓய்வூதிய நிலுவைத் தொகை காசோலைகளை ஆளுநர் வழங்​கியதுடன், வீரமரணமடைந்த வீரர்​களின் குடும்பத்​தினரை கவுர​வித்​தார்.