தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்த கைதி மாயாண்டி என்பவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். பழிக்கு பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். நீதிமன்றம் முன்பே இளைஞர் வெட்டி படுகொலை செய்ய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. நீதிமன்றங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இதேபோன்று வழக்கறிஞர்களும் நீதிமன்றங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் வேண்டுகோள் வைத்தனர்.
இந்த நிலையில் தான் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பைவிட கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், உயர் ரக, அதி நவீன துப்பாக்கிகள் கொடுக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையானது அனைத்து மாவட்ட எஸ்பி மற்றும் நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்திருக்கும் காவலர்கள் தொடர்ந்து காவல் பணியில் இருக்க வேண்டும். காலை முதல் நீதிமன்றம் முடியும் வரை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். வரும் 23 ஆம் தேதிக்குள் இது தொடர்பாக அந்தந்த மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.