காவி வண்ண திருவள்ளுவர் ஓவியம்: அமைச்சர் அன்பில் மகேஸுக்கு இந்து முன்னணி கண்டனம்!

காவி வண்ணத்தில் மாணவர் வரைந்ததால் திருவள்ளுவர் ஓவியத்தை ஓவியக் கண்காட்சியில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அகற்றக் கூறியது அநாகரிகச் செயல் என இந்து முன்னணி கண்டித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

குமரியில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி ஓவியக் கண்காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. ஓவியக் கண்காட்சியில் பங்கு கொண்ட மாணவர் ஒருவர் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் தீட்டி இருந்தார். கண்காட்சியைப் பார்வையிட வந்த பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அந்த ஓவியத்தை நீக்கக் கூறியதுடன் இனி இதுபோன்றவற்றை அனுமதிக்கக் கூடாது என கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஓவியத்தை கண்காட்சியிலிருந்து நீக்கிய படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்தச் செயலானது ஒட்டுமொத்த அதிகார துஷ்பிரயோகம், அராஜக போக்கு, மிகுந்த கண்டனத்திற்குரியது.

சிறியவர் முதல் பெரியவர் வரை நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் தங்களது கருத்தை வெளிப்படுத்த அரசியலமைப்பு சட்டமானது உரிமை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, மாணவர்களின் படைப்புத் திறனை, ஆர்வத்தை, நிறத்தை காரணம் காட்டி முடக்குவது சிறுபிள்ளைத்தனமான செயல். காவி என்பதை திமுக கட்சியும் அதன் தலைவர்களும் நிறமாக மட்டுமே பார்க்கின்றனர். காவி வண்ணம் என்பது துறவின் உச்சம். மனிதனின் உயர்ந்த நிலையாகும். அத்தகைய நிலையில் தெய்வப்புலவர் வாழ்ந்துள்ளார் என்ற வகையில் திருவள்ளுவரை மாணவர் சிந்தித்து வரைந்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருமுன்பு வரை வெளிவந்த அனைத்து பெரியோர்களின் படங்களும், திருவுருவச் சிலைகளும், ஓவியங்களும், தமிழனின் பாரம்பரியத்தை, ஆன்மீகத்தை பிரதிபலிப்பதாகவே இருந்தது. திமுக ஆட்சியில் தான் திருவள்ளுவர் முதல் வடலூர் வள்ளலார் வரை பலரது அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. தமிழனின் அடையாளத்தை சிதைத்து தமிழனின் புகழை கீழ்மைபடுத்தியது திராவிட அரசியல்தான் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

திருவள்ளுவர் ஏதோ திமுகவின் கண்டுபிடிப்பு போல சித்தரித்து, அவரை சிறுமைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை தமிழர்கள் உணர வேண்டும். திருவள்ளுவருக்கு வழிபாடு உள்ள கோயில்களை திமுக அமைச்சர் அகற்ற சொல்லுவாரோ?

கன்னியாகுமரியில் திமுக கட்சியின் முயற்சியால் தான் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் பொய்யாமொழி நினைக்கிறார் போலும். உண்மையில் குமரியில் தற்போதுள்ள இடத்தில் திருவள்ளுவருக்கு திருவுருவ சிலை வைக்க ஏற்பாடு செய்தது இந்து அமைப்புகள் தான். சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைத்தபோது அதனை நிறுவிய தலைவர் ஏக்நாத் ராணடே அவர்கள், அதன் அருகில் உள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் திருவுருவ சிலை அமைப்பது தொடர்பாக அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களிடம் ஆலோசித்தார். தமிழக அரசு சார்பில் அதனை நிறுவுவதாக அவர் கூறினார். அதன்பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் தலைமையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். உண்மையில் அப்போதே அதனை நிறுவியிருந்தால் தற்போது ஐம்பது ஆண்டுகள் ஆகியிருக்கும். அதன்பின் திராவிட அரசியலால் 25 ஆண்டுகள் கழித்துதான் சிலை நிறுவப்பட்டது.

இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களிடம் திராவிடக் கொள்கையை திணிப்பது அநாகரிகமான செயல். கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்பது பற்றியெல்லாம் வாய் கிழிய பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நடைமுறையிலும் செயல்படுத்தும் திராணியை தமிழக அரசு வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய போக்கு திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்காது. குறுகிய மனப்போக்குடன் செயல்படும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும், தமிழக அரசையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.