இந்தியா-சீனா எல்லையில் சத்ரபதி சிவாஜி சிலை திறப்பு!

இந்தியா-சீனா எல்லையில் 14,300 அடி மலைச் சிகரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.

இந்த சிலையை திறந்து வைத்து இந்திய ராணுவத்தின் 14-வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹித்தேஷ் பல்லா, எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:-

கிழக்கு லடாக் செக்டாரில் சீனாவை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஏசி) பகுதியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 14,300 மலைச் சிகரத்தில் பாங்கோங் ஏரி பகுதியில் இந்திய ராணுவம் அமைத்துள்ள இந்த சிலை சிவாஜியின் வீரம், தொலைநோக்கு பார்வை மற்றும் அசைக்க முடியாத நீதியின் உயர்ந்த சின்னமாக திகழும். மேலும், வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக இது விளங்கும். பண்டைய கால சிறப்புகளை சமகால ராணுவ களத்தில் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு ஹித்தேஷ் கூறியுள்ளார்.

எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இந்தியாவும், சீனாவும் டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகளிலிருந்து படையை வாபஸ் பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு எல்லையில் சத்ரபதி சிவாஜி சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.