டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி மேலூர் அருகே பெண்கள் குலவையிட்டும், கிராமிய பாடல்களை பாடியும் போராட்டம் செய்தனர்.
மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்துகின்றனர். இதன் தொடர்ச்சியாக கொட்டாம்பட்டி அருகே கேசம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று கூடினர். சுமார் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக மத்திய அரசு ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட எல்லையிலுள்ள கம்பூர், சேக்கிபட்டி, கருங்காலக்குடி , வஞ்சுநகரம், ஒட்டக்கோவில்பட்டி , சிங்கம்புணரி பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 38,500 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பெண்கள் நாட்டுப்புற பாடல்கள் பாடியும், கும்மியடித்தும், குலவையிட்டும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதற்கிடையில் மதுரை மாங்குளம் அருகிலுள்ள 74 மீனாட்சிபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், பொதுமக்கள் சார்பிலும் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்த ஆயத்தக் கூட்டம் நேற்று நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். தமிழ் தேசிய பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு ஆர்ப்பாட்டமும் நடந்தது.
தீர்மானம்; டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும், முல்லை பெரியாறு பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான பிற அமைப்புகளுடன் இணைந்து போராடுவது உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றினர்.