அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனமானது , பெருநிறுவன மோசடி மற்றும் தவறான நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதில் முக்கியத்துவம் பெற்றது.
இந்திய கோடீஸ்வரர்களில் முதன்மையானவரான அதானியின் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் மூலம் இந்த நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் குற்றச்சாட்டால் அதானி நிறுவனம் பல லட்சம் கோடிகளை ஓரிரு நாள்களில் இழந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அதானி நிறுவனம் பங்குச் சந்தையில் கடுமையான இழப்புகளையும் சந்திக்க நேரிட்டது.
குறுகிய விற்பனைக்கு பெயர் பெற்ற அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் மற்றும் அதன் அறிக்கைகள் இந்திய கோடீஸ்வரர் கெளதம் அதானி மட்டுமின்றி, அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புரி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைத்தது. 2023 ஆம் ஆண்டில் அதானி குழுமத்திற்கு எதிரான அதன் அறிக்கையில் வெட்கக்கேடான கார்ப்பரேட் மோசடி என்று குற்றம் சாட்டியதன் விளைவாக சுமார் 150 பில்லியன் டாலர்களை அதானி நிறுவனம் பறிகொடுத்தது.
அதற்கு முன்னதாக எலக்ட்ரிக் லாரி தயாரிப்பு நிறுவனமான நிகோலா உள்பட பிற முக்கிய வழக்குகளிலும் ஹிண்டன்பர்க்கின் பங்கு அதிகமாகவே இருந்தது. 2020 ஆம் ஆண்டில், நிகோலா தனது தொழில்நுட்பத்தைப் பற்றி முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டியது. இதன் விளைவாக 125 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நிகோலா நிறுவனர் ட்ரெவர் மில்டனுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் காலவரையின்றி மூடப்படுவதாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுபற்றிய அறிவிப்பை நேட் ஆண்டர்சன் நேற்று வெளியிட்டார். ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல் பற்றிய அறிக்கையில் நேட் ஆண்டர்சன் கூறும்போது, “ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடுவதற்கான காரணம் எதுவுமில்லை. மிரட்டல், உடல்நலப் பாதிப்புகள் போன்ற எதுவுமில்லை. கடந்த ஆண்டு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவுடன் விவாதித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இதனால், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவுசெய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.