என்னையும் எனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்தது: ஷேக் ஹசீனா!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தனது பதவி நீக்கத்துக்கு காரணமான மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சி நேற்று வெள்ளிக்கிழமை இரவில் அவரது (ஹசீனா) முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஆடியோவில் ஷேக் ஹசீனா இந்தக் குற்றச்சாட்டினை வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

நானும், ரெஹானாவும் உயிர் பிழைத்தோம். வெறும் 20 – 25 நிமிடத்தில் மரணத்தில் இருந்து தப்பினோம். கடந்த ஆண்டு நடந்த கொலை முயற்சி, முதல் முறையாக நடந்தது இல்லை. எனது வாழ்க்கையில் என்னைக் கொல்வதற்கு பல முறை சதி நடந்திருக்கிறது. ஆகஸ்ட் 21ம் தேதி நடந்த கொலை முயற்சியில் இருந்து நான் உயிர்பிழைத்தேன், கோடாலிபாராவில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்தேன். கடந்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 5ம் தேதி நடந்த சதியிலிருந்தும் தப்பிக்க அல்லாவின் கைகளும் என்னுடன் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், என்னால் உயிர் பிழைத்திருக்க முடியாது. எது எப்படியோ நான் உயிருடன் இருக்க வேண்டும் என்பது அல்லாவின் விருப்பம் போலும். ஏனெனில் நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமென்று அல்லா விரும்புகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நடந்த மாணவர் புரட்சியால் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டார். மாணவர்களின் போராட்டத்தின் தீவிரத்தால், 2024 ஆக.5ம் தேதி ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் பதவி விலக மறுத்த நிலையில் நடந்த போராட்டத்தில் 600 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.